மீளாத் துயரில்.................
முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட
முள்ளிவாய்க்கால் மண்ணில்
மூச்சற்றுப்போன துயரங்களில்
மூழ்கிப் போன ஜீவன்களில்
யானும் ஒருவனானேன்.....
பாதுகாப்பு வலயம் என்ற போர்வையிலே
பலிக்கடாக்களாக்கப்பட்டு
மூவழித் தாக்குதல்களால்
மூடிமறைக்கப்பட்ட உணர்வுகள்....
அவலக் குரல்களின் மத்தியில்
அரைகுறை உயிரைக் கையிலே பிடித்து
அலைந்த உறவுகள் எத்தனையோ பேர்
வேட்டொலிகளால் அதிர்ந்த பூமியினை
வேடிக்கை பார்த்ததோ முழு உலகும்......
செவ்வாயில் நடப்பதைக் கூட
செக்கனுக்குச் செக்கன் தகவல் அனுப்பும்
செயற்கைக்கோள்கள் உலாவரும் பாரிலே
ஒரு கோள் கூடவா பவனி வர மறுத்தது
முற்றுகை வலயத்தின் வான்பரப்பில்.....
தமிழனின் வரலாற்றில் எத்தனை
கறுப்புப் புள்ளிகள்
அத்தனைக்கும் பதில்
ஆண்டவன் நீதி வழி.....
உறவுகள் சாகலாம்
உணர்வுகள் என்றும் வாழும் - என்
உயிரணு உள்ளவரைக்கும்.....
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment