உலகம்

ரஜினி இலங்கை சென்றிருந்தால் சிக்கல்:

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை சென்றால் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதனாலேயே இலங்கைப் பயணத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் தெரிவித்துள்ளார்.



பிரபல நடிகர் ரஜினிகாந்த், இலங்கைக்கு பயணம் செய்வார் என்றும், தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தமிழ் மக்களுக்கு கட்டிக்கொடுக்கும் வீடுகளை பயனாளர்களுக்கு கையளிப்பார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், ரஜினியின் இலங்கை பயணம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் ரஜினி இலங்கைப் பயணத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இவர்களின் வேண்டுகோளினை ஏற்று தன்னுடைய இலங்கைப் பயணத்தை ரத்துச் செய்வதாகவும், மற்றொருமுறை இலங்கைப் பயணத்திற்கான வாய்ப்புகிட்டுமாயின் இதேபோன்று தடுத்துவிடாதீர்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் தான் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்திய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,

நடிகர் ரஜினி காந்த் இலங்கை பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று கோரிக்கை வைத்தோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றுதான் இந்தக் கோரிக்கையை வைத்தோம். எங்கள் கருத்தை அவர் குதர்க்கமாக புரிந்து கொள்ளவில்லை.

ஆனால் பதிலுக்கு அவர், வருங்காலத்தில் "நான் ஈழம் செல்லுவேன். அப்போதும் என்னை எதிர்க்காதீர்கள்" என்று கேட்டிருக்கிறார்.

இன்று நாங்கள் மூன்று கட்சிகளின் சார்பில் ரஜினி காந்த்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். நீங்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்ப்பதற்கும் என்றைக்கு வேண்டுமானாலும் இலங்கைக்கு செல்லலாம்.

அங்கிருக்கும் மக்கள் உங்களை வரவேற்க தயாராக இருக்கிறார்கள். நாங்களும் அதனை எதிர்க்கப் போவதில்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறோம்.

இன்றைய சூழ்நிலையில் தான் ரஜினி காந்த் இலங்கை செல்வது சரியல்ல என்று எடுத்துரைத்தோம், ஏனெனில், இன்றும் வதை முகாம்கள் விலக்கப்படவில்லை. இராணுவ நிலைகள் இன்னும் நீக்கப்படவில்லை.

ஆட்சி ஏற்ற மைத்திரி அரசாங்கம் ராணுவ முகாம்களை கணிசமாக குறைத்துக் கொள்கிறோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை எதுவம் அவ்வாறு நடக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியினைவிட மிக மோசமான ஆட்சி இலங்கையில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது.

தவிர, ஒரு லட்சம் பெண்கள் கணவர்களை இழந்து வாழ்வாதாரத்திற்கே போராடி வருகிறார்கள். அவர்களை இராணுவம் தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குடியிருப்புகளை இராணுவம் பிடிங்கிக் கொள்கிறது.

இந்நிலையில் தான், இன்றைய காலச் சூழலினையும், அரசியல் நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த வேண்டுகோளை ரஜினியிடம் கேட்டுக்கொண்டோம்.

எங்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தன்னுடைய இலங்கைப் பயணத்தினை ரத்துச் செய்துள்ள ரஜினி காந்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனாலும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும், பாதிக்கப்பட்ட நிலத்தினையும் பார்ப்பதற்கு அவர் சென்றால் நிச்சையம் எதுவும் சொல்லமாட்டோம் என்றும் கூட்டாக தெரிவித்துள்ளார்கள்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.